உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
மு.வரதராசனார் உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.
பரிமேலழகர் உரை:
உடைத்தம் வலி அறியார் – கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி – மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் – அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
(‘உடைய’ என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், ‘முரிந்தார் பலர்’ என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.).
உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.
மணக்குடவர் உரை:
தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முதன்மையாக உடைய தனது வலிமையினை அளந்தறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியாரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு.
Transliteration:
udaiththam valiyaRiyaar ookkaththin ookki
itaikkaN murindhaar palar
Translation:
Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.
Explanation:
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
மறுமொழி இடவும்