தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
மு.வரதராசனார் உரை:
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தும்முச் செறுப்ப – எனக்குத் தும்மல் தோன்றியவழி, யார் உள்ளித் தும்மினீர்? என்று புலத்தலை அஞ்சி, அதனையான் அடக்கினேன், அங்ஙனம் அடக்கவும்; நுமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று அழுதாள் – நுமர் நும்மை நினைத்தலை எம்மை மறைக்கல் உற்றீரோ என்று சொல்லிப் புலந்தழுதாள். (‘தும்மு’ என்பது முதனிலைத் தொழிற்பெயர். செறுப்ப என்புழி இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. எம்மை என்பது ‘நும்மோடு யாதுமியைபில்லாத எம்மை’ என்பதுபட நின்ற இசையெச்சம். இதனை வடநூலார் ‘காகு’ என்ப. ‘தும்மினும் குற்றம், ஒழியினும் குற்றமாயக்கால் செயற்பாலது யாது’? என்பதாம்.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ? எனக் கேட்டு அழுதாள்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தமுறை தும்மல் வர அதனை வெளிப்படுத்தாமல் நான் அடக்கினேன்; அதைப் பார்த்து யாரோ உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை நான் அறிந்துவிடக்கூடாது என்று எனக்கு மறைக்கிறீரோ, என்று ஊடி அழுதாள்.
மணக்குடவர் உரை:
தும்மல் தோற்ற அதனை யடக்கினேன். அதற்காக நுமர் உள்ளினமையை எமக்கு மறைக்கின்றீரோ வென்று சொல்லி அழுதாள். இது தும்மாதொழியினும் குற்றமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனக்குத் தும்மல் வந்தபோது அதனை யான் அடக்கினேன். அவள், ‘உன்னுடைய காதலியர் உம்மை நினைப்பதை யான் அறியாதபடி மறைக்கின்றீரோ’ என்று சொல்லிப் புலந்து அழுதாள்.
Transliteration:
thummuch cheruppa azhudhaal numar-ullal
emmai maraiththiroa endru
Translation:
And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), ‘Your thoughts from me you hide’.
Explanation:
When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.
மறுமொழி இடவும்