தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
மு.வரதராசனார் உரை:
காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் – மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் – அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். (‘பனைத்துணையும்’ என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).
உரை:
பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மகளிர்க்குக் காமம் பனையளவினைவிட மிகுதியாக உண்டாகிவிடுமானால் அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படுவதாகும்.
Transliteration:
thinaiththunaiyum oodaamai vaendum panaith-thunaiyum
kaamam niraiya varin
Translation:
When as palmyra tall, fulness of perfect love we gain,
Distrust can find no place small as the millet grain.
Explanation:
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
மறுமொழி இடவும்