அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
மு.வரதராசனார் உரை:
போர் செய்யும் வீரமும்( எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலுமும் இல்லையானால் படைத்தன்னுடைய அணிவகுப்பால் பெருமை பெறும்.
பரிமேலழகர் உரை:
தானை – தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும் – பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன்மேல் வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்; படைத்தகையால் பாடு பெறும் – தன்தோற்றப்பொலிவானே பெருமை எய்தும். (‘இல்லெனினும்’ எனவே, அவற்றது இன்றியமையாமை பெறப்பட்டது. ‘படைத்தகை’ என்றது ஒரு பெயர் மாத்திரமாய் நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர் யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம், காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு, பாடு: கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.).
உரை:
போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும் விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமைய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர் மேல் சென்று வெல்லும் வீரமும், பகைவர் வந்தால் தடுக்கும் பயிற்சியும் ஆற்றலும் படைக்கு இல்லை என்றாலும், அது தன் கட்டுப்பாடான அணிவகுப்பின் காட்சி அழகால் பெருமை பெறும்.
மணக்குடவர் உரை:
பகைவரைக் கொல்லுந் தகுதியும் அவர் மேல்வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும் சேனையானது படையழகினால் பெருமைபெறும்.படையழகென்றது தேர் யானை குதிரைகளின் அலங்காரமும், கொடியும், குடையும், முரசும், காகளமும் முதலாயினவற்றால் அழகு பெறுதல்.இஃது அரசன் படையழகு அமைக்கவேண்டு மென்றது.
Transliteration:
adaldhakaiyum aatralum illeninum thaanai
padaiththakaiyaal paadu peRum
Translation:
Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.
Explanation:
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.
மறுமொழி இடவும்