நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
மு.வரதராசனார் உரை:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு – தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் – என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை – ஒரு நிலையில் நில்லாமை. மடமை – கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் – எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், ‘கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்’, என்றாள்.) .
உரை:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.
மணக்குடவர் உரை:
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்: அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு புலந்து கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத எனது மாட்சிமையில்லாத மட நெஞ்சுடனே கூடி, என் உயிரினும் சிறந்த நாணத்தினையும் மறந்துவிட்டேன்.
Transliteration:
naanum marandhaen avarmarak kallaaen
maanaa madanenjir pattu
Translation:
Fall’n ‘neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.
Explanation:
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
மறுமொழி இடவும்