இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
மு.வரதராசனார் உரை:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் – நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் – இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது (‘நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது’ என்பதாம்.).
உரை:
பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ இறந்துபடாது இருந்து அவர்வரவை நினைந்து வருந்துகின்றது யாதிற்கு? வருத்தமுற்று நினைத்தல் நமக்குச் சிறுமைசெய்யும் நோயைத் தந்தார்மாட்டு இல்லை யாயின். இது வாராது வருந்துகின்றாமென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இத்துன்ப நோயினைச் செய்தவரிடத்தில் நம்மிடம் இரக்கங்காட்டி வருகின்ற எண்ணம் இல்லையே! நெஞ்சமே! நீ அவர் இருக்கும் இடத்திற்குப் போகாமல் இங்கேயே இருந்துகொண்டு அவர் வரவு நோக்கி வருந்துவது ஏன்?.
Transliteration:
irundhulli enparidhal nenje parindhullal
paidhalnoai seydhaarkan il
Translation:
What comes of sitting here in pining thought, O heart? He knows
No pitying thought, the cause of all these wasting woes.
Explanation:
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
மறுமொழி இடவும்