குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
மு.வரதராசனார் உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை:
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று – முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு – உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. (‘தனித்துஒழிய’ என்றதனான் முன் தனியாமை பெற்றாம். அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம் துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும், புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். ‘நட்பு’என்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின் , வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி, ‘குடம்பை’ என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை அறிக.).
உரை:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
மணக்குடவர் உரை:
கூடு தனியேகிடக்கப் புள்ளுப் பறந்து போனாற்போலும்,உடம்போடு உயிர்க்கு உள்ள நட்பு. மேல் ஒருபொழுதென்று காலங்கூறினார் ஈண்டு உயிர் நினைக்காத பொழுது போமென்றார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
முட்டையானது தனித்துக் கிடப்ப, அதனுள்ளே இருந்த பறவை பருவம் வந்தவுடன் பறந்துபோன தன்மையதாகும். எதுவென்றால், உடம்புக்கும், உயிருக்கும் உள்ள நட்பு என்பதாம்.
Transliteration:
kutampai thaniththuozhiyap puLparanh thatrae
udampotu uyiridai natpu
Translation:
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
Explanation:
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
மறுமொழி இடவும்