பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
மு.வரதராசனார் உரை:
(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் – காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் – அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. (‘விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை’? என்பதாம்.).
உரை:
காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?.
மணக்குடவர் உரை:
தான் ஒருவர் பக்கமாகநின்று ஒழுகித் துன்பஞ்செய்கின்ற காமதேவன் நமது தடுமாற்றமும் நாம் உறுகின்ற துன்பமும் காணானோ? காண்பானாயின் நம்மை வருத்தானே, தெய்வமாகலான்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இன்பம் நுகர்வதற்குள்ள ஆண்பெண் இரு பாலரிடத்தும், சமமாக நிற்காமல், ஒருவரிடத்தில் மட்டும் நின்று துன்பம் செய்கின்ற காமன் என்னுடைய நோயினையும் மிகுந்த துன்பத்தினையும் அறியமாட்டானோ?.
Transliteration:
paruvaralum paidhalum kaanaankol kaaman
oruvar-kan nindrozhuku vaan
Translation:
While Kaman rushes straight at me alone,
Is all my pain and wasting grief unknown? .
Explanation:
Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?.
மறுமொழி இடவும்