அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
மு.வரதராசனார் உரை:
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
பரிமேலழகர் உரை:
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை – அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
(அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் – ‘செல்வமாகிய மரத்தை’ என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.).
உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
மணக்குடவர் உரை:
நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம். இஃது அவ்வரசன் கெடுமென்றது.
Transliteration:
allaRpattu aatraadhu azhudhakaN Neerandrae
selvaththaith thaeykkum padai
Translation:
His people’s tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch’s wealth away?.
Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.
மறுமொழி இடவும்