செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
மு.வரதராசனார் உரை:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் – பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் – அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன. (குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.).
உரை:
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
(ஆம். இப்போது தெரிகிறது) கோபம் இல்லாமல் பேசும் பேச்சும், பகைவர் போன்ற பார்வையும், யாரே போலத் தோன்றி நட்பாவார் காட்டும் அடையாளங்கள்.
மணக்குடவர் உரை:
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும். இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பின்னர் இனிதாகவும் முன்னர் இனிமை இல்லாததுமான சொல்லும், மனத்தில் கோபியாதிருந்து புறத்தே கோபித்தார் போன்ற வெகுளி நோக்கும் அயலார் போன்றிருந்து நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவனவாகும்.
Transliteration:
seRaaach chiRusollum setraarpoal noakkum
uRaaarpoandru utraar kuRippu
Translation:
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.
Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.
மறுமொழி இடவும்