குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
மு.வரதராசனார் உரை:
அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.
பரிமேலழகர் உரை:
அருள் கருதி அன்பு உடையர் ஆதல் – அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் – பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.).
உரை:
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.
மணக்குடவர் உரை:
அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அருளினைப் பெறக் கருதி அதன்மீது அன்பு கொண்டிருப்பவராக நடந்து கொள்ளுதல் என்பது, பிறன் பொருளினைக் களவினால் எடுத்துக் கொள்ளுவோம் என்பவரிடம் உண்டாகாது.
Translation:
‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,
Who neighbour’s goods desire, and watch for his unguarded hour.
Explanation:
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property.
மறுமொழி இடவும்