காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
மு.வரதராசனார் உரை:
( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகள் தான் கண்ட கனவினது நிலைமையைத் தோழிக்குச் சொல்லுதல் . அக் கனவு, நனவின்கண் நினைவு மிகுதியாற்கண்டதாகலின் , இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது .]
(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? (‘விருந்து’ என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், ‘யாது செய்வேன்’ என்றாள்.).
உரை:
வந்த கனவு காதலர் அனுப்பிய தூதுடன் வந்ததே; அந்தக் கனவுக்குக் கைம்மாறாக என்ன விருந்து படைத்துப் பாராட்டுவது?.
சாலமன் பாப்பையா உரை:
என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?.
மணக்குடவர் உரை:
நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்?. இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வரக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் அனுப்பிய தூதினைக் கொண்டு என்னிடம் வந்த கனவினுக்கு யான் விருந்தாக யாதினைச் செய்வேன்?.
Transliteration:
kaadhalar thoodhodu vandha kanavinukku
yaadhusey vaenkol virundhu
Translation:
It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?.
Explanation:
Where with shall I feast the dream which has brought me my dear one’s messenger ?.
மறுமொழி இடவும்