குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
மு.வரதராசனார் உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினையுடையர் ஆதல்.இது, மெய்ம்முதலிய அடங்கினார்க்கு அல்லது முடியாது ஆகலின் , அடக்கம் உடைமையின்பின் வைக்கப்பட்டது.)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் – ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் – அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும். (உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். ‘உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்’ என்றார்.).
உரை:
ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத்தைத் தனது உயிரைக் காட்டினும் மிகக் காக்க வேண்டும். இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒழுக்கம் எல்லோருக்கும் பெருஞ் சிறப்பினைத் தருதலால் அவ்வொழுக்கம் உயிரினையும் விட மேம்பட்டதாகப் பாதுகாக்கப்படும்.
Transliteration:
Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam
Uyirinum Ompap Patum.
Translation:
‘Decorum’ gives especial excellence; with greater care
‘Decorum’ should men guard than life, which all men share.
Explanation:
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
மறுமொழி இடவும்