உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
மு.வரதராசனார் உரை:
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது – உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது – அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். (‘காமத்திற்கு’ என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
சாலமன் பாப்பையா உரை:
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
மணக்குடவர் உரை:
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோல் காமத்திற்குப் புணர்தலைவிட ஊடலின்பம் சிறந்ததாகும்.
Transliteration:
unalinum undadhu aral-inidhu kaamam
punardhalin oodal inidhu
Translation:
‘Tis sweeter to digest your food than ’tis to eat;
In love, than union’s self is anger feigned more sweet.
Explanation:
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
மறுமொழி இடவும்