ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
மு.வரதராசனார் உரை:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.
பரிமேலழகர் உரை:
ஆரா இயற்கை அவா நீப்பின் – ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் – அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை ‘பேரா இயற்கை’ என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், ‘அந்நிலையே தரும்’ என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் ‘சீவன் முத்தன்’ என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).
உரை:
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆசையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.
மணக்குடவர் உரை:
நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருபோதும் நிறைவு பெறாத தன்மையுடைய ஆசையினை ஒருவன் நீக்கிவிட்டால், நீக்கிய அச்செயல் அவனுக்கு அப்போதே எக்காலத்திலும் ஒரு நிலையில் நிலைத்திருக்கும் தன்மையைத் தரும்.
Transliteration:
aaraa iyaRkai avaanheeppin anhnhilaiyae
paeraa iyaRkai tharum
Translation:
Drive from thy soul desire insatiate;
Straight’way is gained the moveless blissful state.
Explanation:
The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.
மறுமொழி இடவும்