ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
மு.வரதராசனார் உரை:
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு – இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ – இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி ‘நுதல் வெயர்ப்ப’ என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், ‘இனி அப் பேறு கூடாது’ எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
மணக்குடவர் உரை:
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இப்பெண்ணின் நுதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உளதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமோ?.
Transliteration:
ootip perukuvam kolloa nudhalveyarppak
koodalil thoandriya uppu
Translation:
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.
Explanation:
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.
மறுமொழி இடவும்