யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
மு.வரதராசனார் உரை:
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட…? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) யாரினும் காதலம் என்றேனா – காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் – நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர் என்று சொல்லிப் புலந்தாள். (தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்மை உயர்ச்சிக்கண் வந்தது. ‘யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை’, என்பதாம்.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன் என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும் எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.
மணக்குடவர் உரை:
ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார் யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது, நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமம் அனுபவத்தற்குரிய இருவருள்ளும் “யாம் மிக்க காதலுடையோம்” எனக்கருதி, “யாரினும் காதலம்” என்று கூறினேன். அப்படி நினைக்காமல் “என்னால் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் அதிகக் காதலுடையேம்” என்று கூறினேன் என்பதாகக் கருதி அவள் ஊடிக்கொண்டாள்.
Transliteration:
yaarinum kaadhalam endraenaa ootinaal
yaarinum yaarinum endru
Translation:
‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
‘What all, what all?’ she instant cried; And all her anger woke.
Explanation:
When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
மறுமொழி இடவும்