நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
மு.வரதராசனார் உரை:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் – காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து – அவர் அதனான் வெய்துறலை அறிந்து. (‘எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை’? என்பது குறிப்பெச்சம்.).
உரை:
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.
மணக்குடவர் உரை:
எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து. இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எம் காதலர் எமது நெஞ்சிலேயே இருக்கின்றார். எனவே சூடான உணவை உண்டால் அவர் சூடுபட நேரும் என்றறிந்து சூடான உணவை உன்ன அஞ்சுகிறேன்.
Transliteration:
Nenjaththaar Kaadha Lavaraaka Veydhuntal
Anjudhum Vepaak Karindhu
Translation:
Within my heart my lover dwells; from food I turn
That smacks of heat, lest he should feel it burn.
Explanation:
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.
மறுமொழி இடவும்