குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
மு.வ உரை:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
பரிமேலழகர் உரை:
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் – குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் – வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
(துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் ‘ஈண்டைக்கு’ எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, ‘அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்’ என்றார்.).
உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
மணக்குடவர் உரை:
குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்.
Transliteration:
kutipuRanG kaaththoampik kutram katidhal
vatuvandru vaendhan thozhil
Translation:
Abroad to guard, at home to punish, brings
No just reproach; ’tis work assigned to kings.
Explanation:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
மறுமொழி இடவும்