ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
மு.வரதராசனார் உரை:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
பரிமேலழகர் உரை:
ஞாலம் கருதினும் கைகூடும் – ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் – அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
(‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.).
உரை:
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.
மணக்குடவர் உரை:
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காலத்தினைக் கருதிக் தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்யவேண்டிய செயல்களைச் செய்வாராயின், உலகு முழுவதையும் ஒருவன் ஆள நினைத்தாலும் அது முடியும்.
Transliteration:
Gnaalam karudhinunG kaikootunG kaalam
karudhi idaththaaR seyin
Translation:
The pendant world’s dominion may be won,
In fitting time and place by action done.
Explanation:
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
மறுமொழி இடவும்