நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
மு.வரதராசனார் உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
பரிமேலழகர் உரை:
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை – ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் – தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. ‘ஊங்கு’ என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் ‘துணை’ என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் ‘பகை’ என்றும் கூறினார். ‘அல்லல் படுப்பது’ என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.).
உரை:
நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
மணக்குடவர் உரை:
நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு நல்ல இனத்தினைவிட மேற்பட்ட துணையும் இல்லை. தீய இனத்தினைவிட மிக்க பகையும் இல்லை.
Transliteration:
nallinaththi noongunh thuNaiyillai theeyinaththin
allaR patuppadhooum il
Translation:
Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.
Explanation:
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.
மறுமொழி இடவும்