உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மு.வரதராசனார் உரை:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
பரிமேலழகர் உரை:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே – யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் – கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், ‘அத்தன்மைத்து’ என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.).
உரை:
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
மணக்குடவர் உரை:
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
யாவரும் மகிழுமாறு அவர்களுடன் சேர்ந்து பழகி, இனி அவரை எப்போதும் காண்போம் என நினைத்துப் பிரிகின்ற தன்மையுடையதே கற்றவர்களின் தொழிலாகும்.
Transliteration:
uvappath thalaikkooti uLLap piridhal
anaiththae pulavar thozhil
Translation:
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar’s wonderous art!.
Explanation:
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again).
மறுமொழி இடவும்