நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
மு.வரதராசனார் உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.
பரிமேலழகர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் – தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை – துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் ‘கடை’ எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.).
உரை:
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
மணக்குடவர் உரை:
நன்மையாகும் ஆக்கம் பெரியதேயாயினும் ஓருயிரைக் கொன்று ஆகின்ற ஆக்கம் உயர்ந்தோர்க்கு ஆகாது. இது பெரியோர் வீடுபேற்றை விரும்பிக் கன்மத்தை விடுத்தலால் வேள்வியின் வருங் கொலையும் ஆகாதென்றது.
Transliteration:
nandraakum aakkam peridheninum saandroarkkuk
kondraakum aakkanG kadai
Translation:
Though great the gain of good should seem, the wise
Will any gain by slaughter won despise.
Explanation:
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonorable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.
மறுமொழி இடவும்