குறள் 171:
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
மு.வரதராசனார் உரை:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது, பிறர்க்குரிய பொருளை வௌவக் கருதாமை. பிறர் உடைமை கண்ட வழிப் பொறாமையே அன்றி, அதனைத் தான் வௌவக் கருதுதலும் குற்றம் என்றற்கு, இஃது அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது.)
நடுவு இன்றி நன்பொருள் வெஃகின் – ‘பிறர்க்கு உரியன கோடல் நமக்கு அறன் அன்று’ என்னும் நடுவு நிலைமை இன்றி, அவர் நன்பொருளை ஒருவன் வெஃகுமாயின்; குடி பொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் – அவ் வெஃகுதல் அவன் குடியைக் கெடச்செய்து, பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும். (குடியை வளரச் செய்து பல நன்மையையும் பயக்கும் இயல்புபற்றி, வெஃகின் என்பார்.’நன்பொருள் வெஃகின்’என்றார், ‘பொன்ற’ என்பது ‘பொன்றி’ எனத் திரிந்து நின்றது. ‘செய்து’ என்பது சொல்லெச்சம்.).
உரை:
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்குரிய பொருளை அநீதியாக விரும்பிக் கவர்ந்தால், கவர்ந்தவனின் குடும்பம் அழியும்; குற்றங்கள் பெருகும்.
மணக்குடவர் உரை:
நடுவுநிலைமையின்றி மிக்க பொருளை விரும்புவானாயின் அதனானே குலமுங்கெட்டு அவ்விடத்தே குற்றமுமுண்டாம், இது சந்தான நாச முண்டாமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நடுவு நிலைமையில் இல்லாமல் பிறர்க்குரிய பொருளை வஞ்சித்துக் கொள்ள எண்ணினால் அந்த இச்சை அவனுடைய குடியைக் கெடுத்துக் குற்றத்தினையும் அப்போதே கொடுக்கும்.
Translation:
With soul unjust to covet others’ well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.
Explanation:
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
மறுமொழி இடவும்