குறள் 175:
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
மு.வரதராசனார் உரை:
யாரிடத்திலும் பொருளைக் கவர விரும்பிப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமானதாய் விரிவுடையதாய் வளர்ந்த அறிவால் பயன் என்ன?.
பரிமேலழகர் உரை:
அஃகி அகன்ற அறிவு என்னாம் – நுண்ணிதாய் எல்லா நூல்களினும் சென்ற தம் அறிவு என்ன பயத்ததாம்; வெஃகியார் மாட்டும் வெறிய செயின் – பொருளை விரும்பி, யாவர் மாட்டும் அறிவோடு படாத செயல்களை அறிவுடையார் செய்வாராயின். (‘யார்மாட்டும் வெறிய செய்த’லாவது தக்கார் மாட்டும் தகாதார் மாட்டும், இழிந்தனவும், கடியனவும் முதலியன செய்தல். அறிவிற்குப் பயன், அவை செய்யாமையாகலின் ‘அறிவு என்னாம்’ என்றார்.).
உரை:
யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்?.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருள் மீது, ஆசை கொண்டு எவரிடத்திலும் அறிவற்ற செயல்களைச் செய்தால் செய்பவரின் கூரிய, பல நூல் பயின்று பரந்த அறிவினால் அவருக்கு ஆகும் பயன்தான் என்ன?.
மணக்குடவர் உரை:
நுண்ணிதாகப் பரந்த அறிவுடையானாயினும் அதனாற் பயன் யாதாம்? எல்லார் மாட்டும் பொருளை விரும்பி யீரமில்லாதன செய்வனாயின், இஃது அறிவுடையார் செய்யாரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொருளை விரும்பி யாவரிடத்தும் அறத்துடன் பொருந்தாத செயல்களை அறிவுடையோர் செய்வாராயின், நுணுக்கமான பல நூல்களிலும் சென்ற அவர்களுடைய அறிவு என்ன பயன் உடையதாகும்?.
Translation:
What gain, though lore refined of amplest reach he learn,
His acts towards all mankind if covetous desire to folly turn?.
Explanation:
What is the advantage of extensive and accurate knowledge if a man through covetousness act senselessly towards all ?.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More