அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
மு.வரதராசனார் உரை:
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
பரிமேலழகர் உரை:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் – ஒருவன், தீயவினைகளைச் செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும் – மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன் இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும். (பின் எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் அழ அவரிடம் இருந்து கவர்ந்த பொருள் எல்லாம் நாம் அழ, நம்மை விட்டுப் போய்விடும். செயல் சுத்தத்தால் பெற்ற பொருளை நாம் இழந்தாலும் அவை நமக்குத் திரும்பவும் பலன் கொடுக்கும்.
மணக்குடவர் உரை:
பிறர் அழக்கொண்ட பொருள்களெல்லாம் தாமும் அழப்போம்: அவ்வாறன்றி அறப்பகுதியில் கொண்ட பொருள்கள் இழந்தாராயினும் பின்பு பயன்படும். இது தேடினபொருள் போமென்றது.
Transliteration:
azhakkoNda ellaam azhappoam izhappinum
piRpayakkum naRpaa lavai
Translation:
What’s gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow.
Explanation:
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
மறுமொழி இடவும்