அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
மு.வரதராசனார் உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
பரிமேலழகர் உரை:
ஆங்கு அமைந்து ஒழுகான் – அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் – தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் – தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் – விரையக் கெடும்.
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, ‘வியந்தான்’ என்றார். ‘விரைய’ என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், ‘விரைந்துகெடும்’ என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).
உரை:
மற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.
மணக்குடவர் உரை:
அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறரொடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாமல், தனது வலிமையினையும் அறியாமல் தன்னையே பெருமையாக வியந்துகொண்டு பகைத்துக் கொண்ட அரசன் விரைவாகக் கெடுவான்.
Transliteration:
amaindhaanG kozhukaan aLavaRiyaan thannai
viyandhaan viraindhu kedum
Translation:
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.
Explanation:
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
மறுமொழி இடவும்