இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மு.வரதராசனார் உரை:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.
பரிமேலழகர் உரை:
மருள்நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு – அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வுடையார் ஆயினார்க்கு, இருள் நீங்கி இன்பம் பயக்கும் – அம்மெய்யுணர்வு பிறப்பினை நீங்கி வீட்டினைக் கொடுக்கும். (இருள்: நரகம், அஃது ஆகுபெயராய்க் காரணத்தின்மேல் நின்றது. ‘நீக்கி’ எனத் தொடை நோக்கி மெலிந்து நின்றது; நீங்க என்பதன் திரிபு எனினும் அமையும். ‘மருள்நீங்கி’ என்னும் வினையெச்சம், காட்சியவரென்னும் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. ‘மாசு அறுகாட்சி’ என்றது கேவல உணர்வினை. இதனான் வீடாவது ‘நிரதிசய இன்பம்’ என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப் பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.).
உரை:
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்.
மணக்குடவர் உரை:
மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானமான மயக்கத்திலிருந்து நீங்கிய மெய்யுணர்யுடையார்களுக்கு அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கிப் பேரின்ப வீட்டினைக் கொடுக்கும்.
Transliteration:
iruLnheengi inpam payakkum maruLnheengi
maasaRu kaatchi yavarkku
Translation:
Darkness departs, and rapture springs to men who see,
The mystic vision pure, from all delusion free.
Explanation:
A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven).
மறுமொழி இடவும்