நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
மு.வரதராசனார் உரை:
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
பரிமேலழகர் உரை:
நோய் நாடி – மருததுவனாயினான் ஆதுரன்மாட்டு நிகழ்கின்ற நோயை அதன் குறிகளான் இன்னது என்று துணிந்து; நோய் முதல் நாடி – பின் அது வருதற் காரணத்தை ஆராய்ந்து; அது தணிக்கும் வாய் நாடி – பின் அது தீர்க்கும் உபாயத்தினை அறிந்து; வாய்ப்பச் செயல் – அதனைச் செய்யும்வழிப் பிழையாமற் செய்க. (காரணம் : உணவு செயல் என முற்கூறிய இரண்டும். அவற்றை ஆயுள்வேதமுடையார் நிதானம் என்ப. அவை நாடுதற்பயன் – நோயினையும் வாயினையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் அடங்குதற்கு. ‘அது தணிக்கும் வாய’¢ என்றார். ‘கழுவாயும் உள’ (புறநா.34) என்றார் பிறரும். பிழையாமை – பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறைமையின் தப்பாமை.) .
உரை:
நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும். (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
சாலமன் பாப்பையா உரை:
நோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
மணக்குடவர் உரை:
நோயினையும் ஆராய்ந்து நோய்வருதற்குக் காரணமும் ஆராய்ந்து அந்நோய் தீர்க்கும் நெறியையும் ஆராய்ந்து அது தீர்க்குங்கால் தப்பாமற் செய்க. இது நோய் தீர்க்குமாறு கூறிற்று.
Transliteration:
noainhaati noaimudhal naati adhudhaNikkum
vaainhaati vaaippach cheyal
Translation:
Disease, its cause, what may abate the ill:
Let leech examine these, then use his skill.
Explanation:
Let the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule).
மறுமொழி இடவும்