பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
மு.வரதராசனார் உரை:
(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மாயா என் உயிர் -காதலர் பிரிவைப் பொறுத்து இறந்துபடாதிருந்த என் உயிர்; பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை மாயும் – இன்று பொருளியல்பே தமக்கியல்பாக உடையவரை நினைந்து, இம்மயங்கும் மாலைக்கண்ணே இறந்துபடாநின்றது. (‘குறித்த பருவம் கழியவும், பொருள் முடிவு நோக்கி வாராமையின் சொல் வேறுபடாமையாகிய தம்மியல்பு ஒழிந்தவர் அப்பொருளியல்பே தம் இயல்பாயினார், காலம் இதுவாயிற்று, இனி நீ சொல்கின்றவாற்றால் பயனில்லை’, என்பதாம்.).
உரை:
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
மணக்குடவர் உரை:
பொருள் தேடுதலையே தமக்கு இயல்பாக உடையவரை நினைத்து மயங்கின மாலைப்பொழுதிலே எனது சாகமாட்டாத உயிர் மெலியாநின்றது. இது மாலையாலடர்ப்புண்ட தலைமகள் தலைமகன் அன்பும் அறனும் இலனென்று நினைத்துத் தன்னுள்ளே சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலர் பிரிவைப் பொறுத்து இறந்து போகாதிருந்த எனது உயிர், இன்று பொருளீட்டுவதனையே தமக்கு இயல்பாக உடைய கணவரை நினைத்து மயங்குகின்ற இம்மாலைப் பொழுதில் மாய்கின்றது.
Transliteration:
porulmaalai yaalarai ulli marulmaalai
maayum-en maayaa uyir
Translation:
This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.
Explanation:
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More