சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
மு.வரதராசனார் உரை:
பெரியாரை விரும்பிப் போற்றுவோம் எண்ணும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
பரிமேலழகர் உரை:
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு – அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை – மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது. (குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.).
உரை:
பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது.
மணக்குடவர் உரை:
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து. இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
Transliteration:
siRiyaar uNarchchiyul illai periyaaraip
paeNikkoL vaemennum noakku
Translation:
‘As votaries of the truly great we will ourselves enroll,’
Is thought that enters not the mind of men of little soul.
Explanation:
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
மறுமொழி இடவும்