உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
மு.வரதராசனார் உரை:
எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் உரை:
உற்ற நோய் நீக்கி – தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் – பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் – அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் – குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் – குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன – நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும்,அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.) .
உரை:
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.
மணக்குடவர் உரை:
அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.
பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்குவரும் துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி, பிறகு அவ்வாறான துன்பங்கள் தனக்கு வாராதபடி முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையவர்களை அவர்கள் மகிழ்வதைச் செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.
Transliteration:
utranhoai neekki uRaaamai muRkaakkum
petriyaarp paeNik koLal
Translation:
Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.
Explanation:
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More