நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
மு.வரதராசனார் உரை:
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது – உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது – அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் – ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். ‘இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது’, என்பதாம்.).
உரை:
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
மணக்குடவர் உரை:
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலினிடத்தே இனிதாகும். வெயிலில் இனிதாகாது. அதுபோலப் புணர்ச்சிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையவரிடத்தில்தான் இனிதாகும்.
Transliteration:
neerum nizhaladhu inidhae pulaviyum
veezhunar kannae inidhu
Translation:
Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.
Explanation:
Like water in the shade, dislike is delicious only in those who love.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More