மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
மு.வரதராசனார் உரை:
காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.
பரிமேலழகர் உரை:
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) காமம் மலரினும் மெல்லிது – காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் – அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். (தொட்ட துணையானே மனச்செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், ‘அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்’ என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், ‘மலரினும் மெல்லிது’ என்றும் கூறினான். ‘குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்’ என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.).
உரை:
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.
மணக்குடவர் உரை:
எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர். இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காம இன்பம் மலரைவிட மெல்லியதாக இருக்கும், அவ்வாறு அந்த மென்மைத் தன்மையின் பக்குவத்தினை அறிந்து அதனைப் பெறுபவர் உலகத்தில் சிலரேயாவர்.
Transliteration:
malarinum mellidhu kaamam silar-adhan
sevvi thalaippadu vaar
Translation:
Love is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few.
Explanation:
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
மறுமொழி இடவும்