ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தோழி – தோழி; ஊடற்கண் சென்றேன் – காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது – கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், ‘அது மறந்து’ என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் ‘மன்’ ஒழியிசைக்கண் வந்தது. ‘அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை’ என்பதாம்.).
உரை:
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.
சாலமன் பாப்பையா உரை:
தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.
மணக்குடவர் உரை:
தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தோழி! காதலரிடம் பிணங்கிக் கொள்வதற்காகச் சென்றேன். காதலரைக் கண்டதும் எனது நெஞ்சம் ஊடலினை மறந்துவிட்டு அவருடன் கூடுவதற்குச் சென்றுவிட்டது.
Transliteration:
ootarkan sendraen-man thoazhi adhumarandhu
koodarkan sendradhu-en nenju
Translation:
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
Explanation:
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More