குறள் 150:
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது.
பரிமேலழகர் உரை:
அறன் வரையான் அல்ல செயினும் – ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும், பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று – அவனுக்குப் பிறன் எல்லைக்கண் நிற்பாளது பெண்மையை விரும்பாமை உண்டாயின், அது நன்று. (இக்குணமே மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறன் இல் விழையாதான்கண், குணம் கூறப்பட்டது.).
உரை:
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.
மணக்குடவர் உரை:
அறத்தை வரையாதே அறமல்லாதன செய்யினும் பிறனிடத்து ஆளானவளது பெண்மையை விரும்பாமை நன்று. இஃது ஓரறமுஞ் செய்திலனாயினும் நன்மை பயக்குமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவன் அறத்தினைத் தனக்கு உரித்தாகச் செய்யாமல் புறம்பான தீமைகளையே செய்பவனானாலும், பிறனுடைய உரிமை எல்லைக்குள் இருப்பவளது பெண்மையை விரும்பாமல் இருப்பது நல்லதாகும்.
Transliteration:
Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal
Penmai Nayavaamai Nandru.
Translation:
Though virtue’s bounds he pass, and evil deeds hath wrought;
At least, ’tis good if neighbour’s wife he covet not.
Explanation:
Though a man perform no virtuous deeds and commit (every) vice, it will be well if he desire not the womanhood of her who is within the limit (of the house) of another.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More