இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
மு.வரதராசனார் உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது – மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது – அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , ‘இனன் இல் ஊர்’ என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)
உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.
சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
மணக்குடவர் உரை:
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பெண்களுக்குத் தம் குறிப்பு அறியும் துணையான தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்வது துன்பம் செய்வதாகும். அதனைவிடத் தம் காதலரைப் பிரிதல் மேலும் துன்பத்தினைச் செய்வதாகும்.
Transliteration:
innaadhu inan-il-oor vaazhdhal adhaninum
innaadhu iniyaarp pirivu
Translation:
‘Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell;
‘Tis sadder still to bid a friend beloved farewell.
Explanation:
Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one’s lover.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More