காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
மு.வரதராசனார் உரை:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
பரிமேலழகர் உரை:
(தலைவியர் காமக்கடற் படார், படினும், அதனை ஏற்றபுணையான் நீந்திக் கடப்பார் என்ற தோழிக்குச் சொல்லியது.) உண்டு காமக்கடலே – யாவர்க்கும் உளவாய் வருகின்ற இவ் இரண்டனுள்ளும் எனக்கு உண்டாகின்றது காமக்கடலே; அது நீந்தும் ஏமப்புணை இல் – அதனை நீந்தும் அரணாகிய புணை இல்லை. (இருவழியும் மன்னும் உம்மும் அசைநிலை. ‘தூதுவிட்டு இதற்குப் புணையாகற் பாலையாய் நீயும ஆயிற்றிலை’ என்பது கருத்து.)
உரை:
காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது. ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
காதல் துன்பம், வெட்கம், இவ்விரண்டிலும் என்னுள் மிகுந்திருப்பது காதல் துன்பம் என்னும் கடலே; அதைக் கடக்கப் பாதுகாப்பான படகுதான் இல்லை.
மணக்குடவர் உரை:
காமக்கடல் நிலையாக உண்டே; அது கடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே. இது தலைமகள் ஆற்றாமை கண்டு நெருங்கிக் கூறிய தோழியைக் குறித்து நமக்குத் துணையாவார் இல்லையெனத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமமாகிய கடலே என்னிடம் உண்டாகின்றது. அந்தக் கடலினை நீந்திக் கடக்கின்ற பாதுகாப்பாகிய புணைஇல்லாமல் இருக்கின்றேன்.
Transliteration:
kaamak kadalmannum untae adhuneendhum
emap punaimannum il
Translation:
A sea of love, ’tis true, I see stretched out before,
But not the trusty bark that wafts to yonder shore.
Explanation:
There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with.
மறுமொழி இடவும்