உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) என் நெஞ்சு – என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் – மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி – நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ? (‘அவரை’ என்பது வேற்றுமை மயக்கம் ‘பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ’? என்பதாம்.).
உரை:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!.
மணக்குடவர் உரை:
என்னெஞ்சே! நீ அன்புறாதாரைக் கண்ட விடத்தும் செற்றம் நீங்குவாரென அவர்மாட்டுச் செல்லாநின்றாய். இது தலைமகள் தலைமகன்மாட்டுச் செல்லக் கருதிய நெஞ்சோடு புலந்து கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் நெஞ்சே! நம்மிடம் அன்புடையவர் ஆகாதவரை உள்ளவாறு அறிந்திருந்தும் நாம் சென்றால் அவர் கோபிக்கமாட்டார் என்று கருதி அவரிடம் சொல்லுகின்றாய்! என்னே அறியாமை?.
Transliteration:
uraaa thavarkkanda kannum avaraich
cheraa-arenach chaeriyen nenju
Translation:
‘Tis plain, my heart, that he ‘s estranged from thee;
Why go to him as though he were not enemy?.
Explanation:
my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.”.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More