கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் – யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி – அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. (‘கலத்தலான்’ என்னும் பொருட்டாய்க் ‘கலக்க’ என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு – நிலையில் வெறுப்பு. ‘கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை’ என்பதாம்.).
உரை:
நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?.
சாலமன் பாப்பையா உரை:
என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.
மணக்குடவர் உரை:
என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் நெஞ்சமே! நாம் பிணங்கிக் கொண்டு புலந்திருந்தால் கலவியினாலே நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் புலந்து பின் நீங்காத நீ இப்போது பொய்யாகக் கோபித்துக் கொண்டிருக்கின்றாய்.
Transliteration:
kalandhunarththum kaadhalark kandaar pulandhunaraai
poikkaaivu kaaidhi-en nenju
Translation:
My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
If thou thy love behold, embracing, soothing all thy pain.
Explanation:
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More