நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
மு.வரதராசனார் உரை:
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு – நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ – அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் – ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். ‘புணர’ என்பது ‘புணர்ந்து’ எனத் திரிந்து நின்றது. ‘யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று’, என்பதாம்.).
உரை:
நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?.
சாலமன் பாப்பையா உரை:
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?.
மணக்குடவர் உரை:
தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ?.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தீயிலிடப்பட்ட கொழுப்பானது எவ்வாறு உருகுமோ அதுபோன்ற நெஞ்சினையுடைய மகளிர்க்கு அவர் புணர, யாம் ஊடிப்பின்பு புணராது அந்நிலைமையிலேயே நிற்கக் கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ?. உண்டாகாது.
Transliteration:
ninandheeyil ittanna nenjinaarkku undoa
punarndhoodi niRpaem enal
Translation:
‘We ‘ll stand aloof and then embrace’: is this for them to say,
Whose hearts are as the fat that in the blaze dissolves away?.
Explanation:
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?.
மறுமொழி இடவும்