காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
மு.வரதராசனார் உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
பரிமேலழகர் உரை:
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை – யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே – என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, ‘கடும்புனல்’ என்றான். ‘இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்’, என்பதாம்.).
உரை:
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.
சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
மணக்குடவர் உரை:
யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையுமாகிய புணைகளை என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகா நின்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமத்தினைக்கடப்பதற்காக நான் கொண்டிருந்த நாணம், நல்லாண்மையாகிய புணைகளை என்னிடமிருந்து பிரித்துக்கொண்டு காமமாகிய கடுமையான புனல்கொண்டுபோய் விட்டது.
Transliteration:
kaamak kadumpunal uykkum naaNodu
nallaaNmai ennum puNai
Translation:
Love’s rushing tide will sweep away the raft
Of seemly manliness and shame combined.
Explanation:
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.
மறுமொழி இடவும்