அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
மு.வரதராசனார் உரை:
அன்புடையவனாதல், தகுதியானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதிகள்.
பரிமேலழகர் உரை:
அன்பு உடைமை – தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்; ஆன்ற குடிப்பிறத்தல் – அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும்; வேந்து அவாம் பண்பு உடைமை – அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்; தூது உரைப்பான் பண்பு – தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம். (முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.) .
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
மணக்குடவர் உரை:
அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.
Transliteration:
anpudaimai aandra kutippiRaththal vaendhavaam
paNpudaimai thoodhuraippaan paNpu
Translation:
Benevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve.
Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
மறுமொழி இடவும்