மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
மு.வரதராசனார் உரை:
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?.
பரிமேலழகர் உரை:
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை – பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் – ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? (‘உடம்பு’ என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், ‘உடம்பும் மிகை’ என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் ‘யான்’ எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.).
உரை:
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே மிகையான ஒன்றாக இருக்கும்போது, அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக?.
சாலமன் பாப்பையா உரை:
இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?.
மணக்குடவர் உரை:
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறப்பு அறுத்தலை மேல்கொண்டவர்களுக்கு உடம்பும் மிகையானதாகும். அப்படியிருக்க, அதற்க்கு மேலேயும் சில பொருள்களின் மீது தொடர்ப்பாடு உண்டாதல் என்னாகும்?.
Transliteration:
matrum thodarppaatu evan-kol piRappaRukkal
utraarkku udampum mikai
Translation:
To those who sev’rance seek from being’s varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.
Explanation:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
மறுமொழி இடவும்