நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
மு.வரதராசனார் உரை:
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் – என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய – அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம். (இழிவு சிறப்பு உம்மை, ‘அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்’ என்பதுபட நின்றது. ‘அதுவும் பெற்றிலேன்’என்பதாம்.).
உரை:
என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
மணக்குடவர் உரை:
எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயினும் அவர் பக்கத்தனவாகிய சொற்களும் எங்கள் செவிக்கு இனியவாம்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட காதலர் என்னிடம் அன்பில்லாதவரேயானாலும், அவரிடமிருந்து வருகின்ற எந்த ஒருசொல்லும் எனது செவிக்கு இனிமை தருவதாகும்.
Transliteration:
nasai-iyaar nalkaar eninum avarmaattu
isaiyum iniya sevikku
Translation:
Though he my heart desires no grace accords to me,
Yet every accent of his voice is melody.
Explanation:
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.
மறுமொழி இடவும்