வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
மு.வரதராசனார் உரை:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி – அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தால், தம்மை இன்றியமையா மகளிர்க்கு அவரை இன்றியமையாக் கணவர் அளவறிந்து வந்து செய்யும் தலையளி; வாழ்வார்க்கு வானம் பயந்தற்று – தன்னையே நோக்கி உயிர் வாழ்வார்க்கு வானம் அளவறிந்து பெய்தாற் போலும். (‘நம் காதலர் நம்மை விழையாமையின், அத்தலையளி இல்லையாகலான், மழை வறந்துழி அதனான் வாழ்வார் போல இறந்து படுதலே நமக்கு உள்ளது’ என்பதாம்.).
உரை:
காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.
மணக்குடவர் உரை:
காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள், உயிர் வாழ்வார்க்கு, மழை பெய்தாற்போலும்; அஃதில்லார்க்கு வாடுதலே யுள்ளது. இது நின்மேனி பொலிவழிந்த தென்னும் தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிரிந்திருக்கும் கணவர் காலமறிந்து வந்துகாட்டும் பேரன்பு மகளிர்க்கு, தன்னையே நம்பி உயிர்வாழுகின்ற மக்களுக்குக் காலமறிந்து மலை அளவுடன் பெய்தது போன்றதாகும்.
Transliteration:
vaazhvaarkku vaanam payandhatraal veezhvaarkku
veezhvaar alikkum ali
Translation:
As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.
Explanation:
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.
மறுமொழி இடவும்