காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
மு.வரதராசனார் உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
பரிமேலழகர் உரை:
காக்கை கரவா கரைந்து உண்ணும் – காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள – சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். ‘அப்பெற்றித்தாயஇயல்பு’ என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.).
உரை:
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.
மணக்குடவர் உரை:
காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.
Transliteration:
kaakkai karavaa karaindhuNNum aakkamum
annanhee raarkkae uLa
Translation:
The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.
Explanation:
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More