பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
மு.வரதராசனார் உரை:
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் – காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து – இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.).
உரை:
ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
சாலமன் பாப்பையா உரை:
அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
மணக்குடவர் உரை:
ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நம் பிரிவினால் உண்டான துன்பத்தினைப் பொறுத்திருந்து பிறகு மகிழும் வண்ணம் கணவர் திரும்பிவந்து கலக்கின்ற கலவி மேலும் அத்துன்பத்தினைப் பொறுத்திருந்து அவரது அன்பில்லாத் தன்மையினை நினைக்கும் தன்மையுடையது.
Transliteration:
peridhaatrip petpak kalaththal aridhaatri
anpinmai soozhva thudaiththu
Translation:
While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.
Explanation:
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
மறுமொழி இடவும்