கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
மு.வரதராசனார் உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]
(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் – நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து – அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு – நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் – நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.).
உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.
சாலமன் பாப்பையா உரை:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.
மணக்குடவர் உரை:
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நீ சொல்லாமல் மறைத்தாயானாலும் அதனைக் கடந்து உன்னுடைய மையுண்ட கண்கள் எமக்குச் சொல்லும் செய்தியொன்று இருக்கின்றது. இனி அதனை நீயே தெளிவாகச் சொல்லுவாயாக.
Transliteration:
karappinung kaiyikanh thollaanin un-kan
uraikkal uruvadhon rundu
Translation:
Thou hid’st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.
Explanation:
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
மறுமொழி இடவும்