இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
மு.வரதராசனார் உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகன் தலைமகள் குறிப்பினை அறிதலும் , தோழி குறிப்பினை அறிதலும், அவள்தான் அவ்விருவர் குறிப்பினையும் அறிதலுமாம் . தகை அணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுங்கால் இது வேண்டுமாகலின் , தகை அணங்கு உறுத்தலின்பின் வைக்கப்பட்டது.]
(தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு – இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து – அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு. (உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.).
உரை:
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.
சாலமன் பாப்பையா உரை:
இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.
மணக்குடவர் உரை:
இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம். நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.
Transliteration:
irunhoakku ivaLuNkaN uLLadhu orunhoakku
noainhoakkon Ranhnoai marundhu
Translation:
A double witchery have glances of her liquid eye;
One glance is glance that brings me pain; the other heals again.
Explanation:
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.
மறுமொழி இடவும்